அசைந்தாடும் மயில் ஒன்று காணும்

ராகம்: சிம்மேந்திர மத்யமம்
தாளம்: ஆதி

அசைந்தாடும் மயில் ஒன்று காணும் – நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!
(அசைந்தாடும்)

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் – என்றும்
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்

எங்காகிலும் எமது இறைவா இறைவா
என மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான் – அருள்
பொங்கும் முகத்துடையான்

ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி – நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட
மதி வதனமாட மயக்கும் விழியாட
மலரணி களாட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என
மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று
நிஜமான சுகம் என்று ஒன்று – இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசைதோறும் கோபாலன் நின்று – மிக
எழில் பொங்க நடமாட
எதிர் நின்று ராதைபாட
(எங்காகிலும் எமது இறைவா இறைவா)

(அசைந்தாடும்…)

This entry was posted in Oothukadu, Tamil. Bookmark the permalink.

Leave a comment